Monday, January 26, 2015

பீடியும் பால்யமும்.

அப்போது எனக்கு ஒரு 11 வயதிருக்கும். இப்படித்தான் தொடங்குகிறது எனக்கும் புகைக்குமான தொடர்பு. 21-ம் நூற்றாண்டு தொடங்க எத்தனித்த நேரம். அப்போது, எங்களுக்கு பெரிதாக நேரவிரயம் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை. கைப்பேசி, தொலைக்காட்சி,கணினி போன்றவை பிரபலமடையாத கிராமம். கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்.. இதுதான் சகலமும். காலையில் ஆரம்பித்தால், மதியம் தொடர்ந்து மாலை, கதிரவன் கண்ணை மூடும் வரை தொடரும். அதுபோக என்னுடன் சேர்ந்த சில எலக்ட்ரானிக் நண்பர்களும் உண்டு. எங்களின் வேலை, சிறு சிறு மின்மோட்டார்களைத் திருடியோ, வாங்கியோ பேட்டரி கனெக்ஷன் கொடுத்து, அதன் முனையில் ஒரு பனை/தென்னை ஓலையை சொருகி, மின்விசிறி போல ஓடவிடுவது.

அப்படியான ஒரு மின் மோட்டார் ஓட்டத்தின்போதுதான், ஒரு சிறு பிரச்சினை வந்தது. அது, ஒரு ஒயர் கட் ஆனதால் வந்த பிரச்சினை. இங்கேதான் உண்மையில் கதை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னுரை இல்லாமல் எழுத முடியாதல்லவா?. கதைக்கு வருவோம்.

பிய்ந்து போன ஒயரை ஒட்ட வைக்க ஒரே வழி, சால்டரிங் பண்ணுவது. சால்டரிங் செய்யும் கருவியும், அதற்குத் தேவையான மின்சாரமும் எங்களின் பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் என் சித்தப்பா வீட்டில் மட்டுமே உண்டு. இதற்கு முன்பெல்லாம் சால்டரிங் பண்ணும் கருவி, எப்போதும் மாடாக்குழியில்தான் இருக்கும். ஆனால் இன்றோ, சலவுப்பெட்டியில் வைத்துவிட்டார்கள். வீடு முழுவதும் தேடி, கடைசியாகக் கண்டுபிடிக்கும் வரை, இருக்குமிடம் தெரியாதல்லவா? தேடினோம் தேடினோம் ஒருமணி   நேரமாகத் தேடினோம். கடைசியில் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி பிரச்சினையில்லை, எப்போது கேட்டாலும், சலவுப்பெட்டியில் இருக்கிறதென்று சொல்லிவிடலாம்.

சரி இப்போ அதுக்கென்ன என்று சொல்வது கேட்கிறது. விஷயத்துக்கு வருவோம். தேடிப்பிடித்தாயிற்று. பற்ற வைக்க வேண்டும். அதற்கு உருகும் கம்பி வேண்டும். இனிமேதான் கதை ஆரம்பிக்கப்போகிறது, கவனியுங்கள்.

அதைத்தேடும்போதுதான், அதே சலவுப்பெட்டியில் ஒரு பீடி கிடைக்கிறது. ம்ம்ம் கதைக்கு வந்தாயிற்று. தேடியவர்கள் மூன்றுபேர். பீடியைப் பகிர வேண்டுமல்லவா?. ஆளுக்கொரு முறை இழுத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. ஆனால் அடுத்த தேவை அதுவல்ல, அதைப்பற்ற வைக்க தீப்பெட்டியும், பற்ற வைத்தபின் இழுக்க ஒரு மறைவிடமும்தான். வாழுமிடத்தில் மறைவுடம் பிடிப்பதா கடினம்?. பிடித்தாயிற்று. பற்றவும் வைத்தாயிற்று. முதல்முறை அதனை இழுக்கும்போது தெரியாது, புகையை உள்ளே இழுத்து, நுரையீரலை ஓட்டை போட வேண்டுமென்பது. வெறும் வாயில் இழுத்து இழுத்து ஊதியும் விட்டோம். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆகட்டும், பத்தவில்லை ஒற்றைப்பீடி. மூவரின் சோப்புகளையும் தொலாவி ஒரு எட்டணா எடுத்தாயிற்று. நேரே கடைக்குப் போவது பெரிய விஷயமில்லை. கிராமமாயிற்றே!! அத்தனை கடைக்காரர்களும் தெரிந்தவர்கள். எப்படி வாங்குவது? இருக்கவே இருக்கிறார் சித்தப்பா. வாங்கிவரச்சொன்னார் என்று பழியைப்போட்டு வாங்கியும் விட்டாயிற்று.

அப்போது உடன் சேர்ந்தவன் தான் என் புகைக்குருவாகப் போகிறான் என்று தெரியவில்லை. எட்டணாவிற்குக் கிடைத்த மூன்று பீடிகளுடன் புகைக்குருவையும் சேர்த்துக்கொண்டு மறைவிடத்துக்கு வந்தாயிற்று. பற்ற வைத்தபிறகுதான் சொல்லிக்கொடுக்கிறான் நான்காவது நண்பன், எப்படி இழுக்க வேண்டுமென்று.

"மொதல்ல, பீடிய பத்த வைடா. அப்பறமா, லேசா பொகய வாயில இழு"

"இழுத்திட்டியா?"

"ம்ம்ம்டா"

"இப்ப, அப்பிடியே வாயத்தொறந்து, வேகமா உள்ள இழுடா"

இரும ஆரம்பித்தேன். அப்போது இரும ஆரமபித்தது, இப்போதுவரை தொடர்கிறது.

ஆக, யாரும் தானாக கெட்டுப்போவதில்லை. கெடுப்பவர்கள் யாரும் உள்நோக்கத்தோடு கெடுப்பதில்லை.